செய்திகள் :

"நான் கூட்டணிக் கட்சிப்பா... என் மேலேயே ரெய்டா?" - கொதித்த வைத்திலிங்கம்; அதிரடித்த அமலாக்கத்துறை

post image

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரான ஆர்.வைத்திலிங்கம் மீது ரெய்டு அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது அமலாக்கத்துறை. 2011-16 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு லஞ்சமாக 27.90 கோடி ரூபாய் பெற்றதாக அவர்மீது அறப்போர் இயக்கம் புகாரளித்திருந்தது. அதனடிப்படையில், வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, மைத்துனர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

அந்த வழக்கை அடிப்படையாக வைத்து, சட்டவிரோத பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் தனியொரு வழக்கைப் பதிந்திருக்கும் அமலாக்கத்துறை, வைத்திலிங்கம் தொடர்புடைய பதினோரு இடங்களில் ரெய்டு நடத்தியிருக்கிறது. ரெய்டு தொடங்கியபோது, ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாட்டிலுள்ள தனது வீட்டில்தான் இருந்திருக்கிறார் வைத்திலிங்கம். காலை 6 மணிக்கெல்லாம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக் கதவைத் தட்டவும், அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனதாகச் சொல்கிறார்கள் வைத்திக்கு நெருக்கமானவர்கள்.

வைத்திலிங்கம் வீடு

இந்த ரெய்டு குறித்து நம்மிடம் பேசிய வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், "இந்த அமலாக்கத்துறை ரெய்டை துளியும் எதிர்பார்க்கவில்லை வைத்திலிங்கம். சோதனைக்காக அதிகாரிகள் வந்தபோது, 'என்ன வழக்கு... எதற்காக வந்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டார். வழக்கின் விபரங்களை எடுத்துச்சொன்ன அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்குத் தொடர்புடைய பதினோரு இடங்களில் ரெய்டு தொடங்கியுள்ளதாகப் பதிலளித்தனர். இதில் டென்ஷனான வைத்தி, 'நான் டெல்லியோட கூட்டணிக் கட்சிங்க... என் மேலேயே ரெய்டா?' எனக் கடுகடுத்தாராம். 'எங்க வேலையைத்தான் செய்ய வந்திருக்கிறோம்' என அதிகாரிகள் சொல்லவும், சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், வீட்டின் சாவிக் கொத்தை கொண்டுவரச் சொல்லி அதை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். ரெய்டு தொடங்கிய சில நிமிடங்களிலேயே மொத்த ஊரும் பரபரப்பானது. அவரது ஆதரவாளர்கள் அனைவரும் வீட்டின் முன்பாகத் திரளத் தொடங்கினர்.

'அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழு'-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்-க்கும் தகவல் போனது. அதிர்ச்சியில் உறைந்துபோன ஓ.பி.எஸ்., திருச்சியிலிருந்த வெல்லமண்டி நடராஜனுக்குப் போன் போட்டு, 'நீங்க உடனே ஒரத்தநாடுக்குப் போங்க...' எனக் கேட்டுக்கொண்டார். காலை பத்து மணிக்கெல்லாம் வைத்தியின் வீடு முன்பு கூட்டம் திரண்டுவிட்டது. ரெய்டுக்கு வந்த அதிகாரிகளுக்கெல்லாம் ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரவழைக்கப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்துக்கு வீட்டிலேயே சாப்பாடு ரெடியானது. குளித்து முடித்துவிட்டு ஃப்ரெஷாக வெளியே வந்தவர், 'அவங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்லிகிட்டு இருக்கேன். நீங்களெல்லாம் கெளம்புங்க. ஒரு பிரச்னையும் இல்ல...' என வெல்லமண்டி நடராஜனிடம் சொல்லிவிட்டுப் போனார். வைத்தியின் மகன்கள் இயக்குநர்களாக இருக்கும் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் நிறுவனம் குறித்தும், அமைச்சராக அவர் இருந்தபோது ஶ்ரீராம் பிராபர்ட்டீஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்தும் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பினர்.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

'திருச்சியில ஏக்கர் கணக்குல நிலம் வாங்குறதுக்கு உங்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது... முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்திற்கு கடனாக வந்தத் தொகையை திருப்பிச் செலுத்திவிட்டீர்களா...' என அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் வைத்தி பதிலளித்தார். வைத்தியின் மைத்துனர் பன்னீர்செல்வத்தின் வீட்டிலும் சோதனை நடந்தது. ரெய்டின் தொடக்கத்தில் வைத்தியிடம் தென்பட்ட பதட்டமும் கோபமும் மதியத்திற்கு மேல் தணிந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காகக்கூட தேர்தல் பணியாற்ற செல்லாத வைத்தி, தஞ்சாவூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.முருகானந்தத்திற்காக தேர்தல் பணியாற்றினார். பா.ஜ.க-வின் வெற்றிக்காக உழைத்தவர் மீதே அமலாக்கத்துறை ரெய்டு நடத்தப்பட்டிருப்பது எங்களையெல்லாம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது" என்றனர் விரிவாக.

ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பதால், சென்னை எம்.எல்.ஏ ஹாஸ்டலில் வைத்திலிங்கத்திற்கு என தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையிலும் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். அந்த அறையில் தங்கியிருந்த வைத்தியின் உறவுகள் சிலரிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அத்துடன், அசோக்நகரிலுள்ள வைத்தியின் மகன் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை சி.எம்.டி.ஏ அலுவலகத்திலும் சோதனையிட்ட அதிகாரிகள், வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது ஶ்ரீராம் பிராபர்டெட்டீஸ் நிறுவனத்திற்காக வழங்கப்பட்ட அனுமதி கடிதங்களையும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.

வைத்திலிங்கம்

நம்மிடம் பேசிய வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான முன்னாள் அமைச்சர் ஒருவர், "அ.தி.மு.க ஒன்றிணைவதை பா.ஜ.க ஒருபோதும் விரும்பவில்லை. அ.தி.மு.க பிரிந்துகிடந்தால்தான், தங்களை வளர்த்துக்கொள்ள முடியுமென பா.ஜ.க நம்புகிறது. அ.தி.மு.க-வை மேலும் பலவீனப்படுத்தத்தான் அவர்கள் முயல்கிறார்கள். இந்தச் சூழலில்தான், கழகத்தை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை வைத்திலிங்கம் மேற்கொண்டு வருகிறார். சசிகலா, டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க-விலிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலருடனும் அவர் பேசி வருகிறார். மீண்டும் அ.தி.மு.க ஒன்றுபட்டால், அரசியல்ரீதியாக பா.ஜ.க-வுக்குப் பெரும் பின்னடைவாகிவிடும். அதனால்தான், ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் வைத்திலிங்கத்தின்மீது ரெய்டு அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பா.ஜ.க. 'இணைப்புக்கு யாரும் முயற்சி செய்யாதீர்கள்' என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்கள்" என்றார் சூடாக.

ரெய்டை பா.ஜ.க ஏவியதோ... அல்லது, லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த வழக்கிலிருந்து அமலாக்கத்துறை நூல் பிடித்ததோ... எது எப்படியென்றாலும், வைத்திலிங்கம் சற்று ஆடித்தான் போயிருக்கிறார். "செந்தில் பாலாஜி பாணியில் நம்ம அண்ணனையும் கைது செய்துவிடுவார்களோ..." என அவரது ஆதரவாளர்கள் பதறியதும் உண்மை. தஞ்சை அரசியலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் திரும்பித்தான் பார்க்க வைத்திருக்கிறது வைத்திலிங்கம் மீதான அமலாக்கத்துறையின் அட்டாக்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

வயநாடு இடைத்தேர்தல்: "என்னை ஏற்றது போல பிரியங்காவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" - ராகுல் காந்தி பிரசாரம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந... மேலும் பார்க்க

உ.பி இடைத்தேர்தல்: இந்தியா கூட்டணிக்குச் சைக்கிள் சின்னம்; அகிலேஷ் ட்வீட்டால் காங்கிரஸ் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்ச... மேலும் பார்க்க

"உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது" - உதயநிதியின் பேச்சுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

"நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்..." என்று அ.தி.மு.க., முன்னா... மேலும் பார்க்க

Maharashtra: வேட்பாளர் அறிவிப்பில் சொதப்பிய உத்தவ்... எதிர்க்கட்சிகளின் `85’ ஃபார்முலா!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணிகள் தொகுத... மேலும் பார்க்க

Vaithiyalingam -க்கு BJP வார்னிங் - அமலாக்கத்துறை ரெய்டு பின்னணி! | ED raid news | OPS

வைத்திலிங்கம் எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு டி.வி.ஏ.சி.யால் தொடரப்பட்ட ஊழல் வழக்கைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்... மேலும் பார்க்க

வைத்திலிங்கம்: 15 மணி நேர ED ரெய்டு; 7 மணிக்கு உள்ளே சென்ற பிரின்டர், லேப்டாப் - ஆவணங்கள் சிக்கியதா?

ஏறுஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க உரிமை மீட்புக் குழுவில் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்தநிலையில் வைத்திலி... மேலும் பார்க்க