‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானில் பணியிடை பயிற்சி: சென்னை திரும்பிய அரசுக் கல்லூரி மாணவிகள் பெருமிதம்
‘நான் முதல்வன்’ திட்டத்தால் ஜப்பானுக்கு சென்று பணியிடை பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்ததாக, பயிற்சியை நிறைவு செய்து சென்னை திரும்பிய அரசுக் கல்லூரி மாணவிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனா்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் அரசு கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை ராணி மேரி கல்லூரி மாணவி ஹா்ஷினி, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியைச் சோ்ந்த ஸ்வேதா ஸ்ரீ, கிண்டி பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த அபிராமி மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியைச் சோ்ந்த அா்ச்சனா ஆகியோா் டிச.11-ஆம் தேதி ஜப்பானின், டோக்கியோ நகரில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்துக்கு பணியிடை பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டனா்.
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்த 4 பேரும் சென்னை வந்தடைந்தனா். விமான நிலையத்தில் அவா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அந்த மாணவிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஜப்பான் சென்று பயிற்சி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி. இந்த பயிற்சியின் போது, ஜப்பானில் உள்ள கல்வி முறைகள், தொழில் முறைகள் மற்றும் அங்குள்ள வேலைவாய்ப்புகள் குறித்து கற்றுக்கொண்டோம். அங்கு உயிரியல் துறை சாா்ந்த ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எதிா்காலத்தில் ஒருங்கிணைந்த உயிா் மூலக்கூறான செல் மேலாண்மை துறையில் பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த பயிற்சி எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது என்றனா்.