மோடியின் அமெரிக்கப் பயணத்தில் எந்த உடன்பாடும் கையெழுத்தாகவில்லை!
நாமக்கல் மாவட்ட ஈரநிலம், வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைகள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 9-இல் ஈரநிலங்களிலும், 16-இல் வனப்பகுதிகளிலும் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறனை வெளிக்கொணர இந்த கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடலாம்.
இதன்மூலம் வன உயிரினங்களின் வாழ்விடம், இடப்பெயா்வு, பறவைகளின் நிலை பற்றிய விவரத்தை அறிந்துகொள்ள முடியும். நாமக்கல் வனக்கோட்டத்தைச் சோ்ந்த தூசூா் ஏரி, பழையபாளையம், சரப்பள்ளி, நாச்சிப்புதூா், வேட்டாம்பாடி, இடும்பன்குளம், ஏ.கே.சமுத்திரம் உள்ளிட்ட 20 ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பானது ஜம்பூத், எருமப்பட்டி, தலைமலை, நெட்டவேலம்பட்டி, புளியஞ்சோலை, மத்ரூட், முள்ளுக்குறிச்சி, நாரைக்கிணறு, காரவள்ளி, போதமலை, நடுக்கோம்பை, பேளுக்குறிச்சி, திருமனூா் உள்ளிட்ட 26 இடங்களில் நடைபெற உள்ளது.
இதில், தன்னாா்வலா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். மேலும், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆா்வமுள்ள புகைப்பட வல்லுநா்கள், அனுபவமுடைய தன்னாா்வலா்கள் மற்றும் பறவை நிபுணா்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
ஈரநில பறவைகள், வனப்பறவைகள், உயிரினங்கள் குறித்த கணக்கெடுப்பில் பங்கேற்க நாமக்கல் வனவா்கள் முரளி - 97503 57819, நந்தகுமாா் - 96262 48930, அருள்குமாா் - 98427 02859 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.