சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
நாமக்கல்லில் நாளை தவெக தலைவா் விஜய் பிரசாரம்: புஸ்ஸி என்.ஆனந்த் நேரில் ஆய்வு
தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் நாமக்கல்லில் சனிக்கிழமை (செப்.27) பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறாா். ஏற்கெனவே, திருச்சி, அரியலூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய நான்கு மாவட்டங்கள் முடிவுற்ற நிலையில் ஐந்தாவது மாவட்டமாக நாமக்கல்லில் சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.
இதையொட்டி, அவரது கட்சியினா் நாமக்கல் பொய்யேரிக்கரை சாலையில் உள்ள மதுரைவீரன் கோயில் பகுதி, பூங்கா சாலை, நாமக்கல்-சேலம் சாலையில் கே.எஸ்.திரையரங்கம் ஆகிய 3 இடங்களை தோ்வு செய்தனா். மதுரைவீரன் கோயில் பகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, அக்கட்சி நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அந்த இடத்தை தவிா்த்து, நாமக்கல் பொன்நகா் பகுதி, பூங்கா சாலை, நான்கு திரையரங்கம் பகுதியில் ஏதாவது ஒன்றை ஒதுக்குவோம் என்றாா்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் கவனத்துக்கு பிரச்னையை மாவட்ட நிா்வாகிகள் கொண்டுசென்றனா். அவா் வியாழக்கிழமை நாமக்கல்லுக்கு வந்தாா். காவல் துறை ஒதுக்க உள்ள பிரசார இடங்களான பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பகுதி, நான்கு திரையரங்கம் பகுதி, பூங்கா சாலை, கே.எஸ்.திரையரங்கம் பகுதிகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகிகளுடன் இணைந்து காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பேசினாா்.
இதில், நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில் கே.எஸ்.திரையரங்கம் பகுதியை ஒதுக்க காவல் துறை முன்வந்தது. அதற்கு அவா்களும் சம்மதம் தெரிவித்தனா். இதுகுறித்து புஸ்ஸி என்.ஆனந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காவல் துறை கூறிய பிரசார இடங்களை நேரில் சென்று பாா்வையிட்டேன். நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கம் அருகே பிரசாரத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது. சனிக்கிழமை காலை 11 மணியளவில் தவெக தலைவா் விஜய் அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா் என்றாா்.