செய்திகள் :

நிதமும் அருளும் நித்ய சுமங்கலி மாரியம்மன்

post image

கடையேழு வள்ளல்களில் ஒருவரான "வல்வில் ஓரி' கொல்லிமலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த காலம். இராசையம்பதி, இராஜபுரம் என்றெல்லாம் முன்பு அழைக்கப்பட்ட ராசிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழும்போது, ஓரிடத்தில் கலப்பை சிக்கிக் கொண்டது. ஏர் நகராமல் நிற்க, சிறிது நேரத்தில் அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. விவசாயி திகைத்தார். பூமிக்கு அடியில் தோண்ட தேவபீடம் தட்டுப்பட்டது.

பீடத்தை விவசாயி வெளியில் எடுக்க முயன்றபோது, விண்ணில் இருந்து ஒலித்த அசரீரி, "நான் மக்களைக் காக்கும் மாரி. கலியுகத்தில் பூமிக்குள் இருந்து வெளிப்பட காத்திருந்தேன். பூமியில் புதைந்திருந்த எனக்கு, இங்கேயே வழிபாடு செய்தால் காவலாய் இருந்து காத்தருள்வேன்'' என்றது.

ஊர் மக்கள் மகிழ்ந்து, இந்த இடத்தில் சிறு குடில் அமைத்து வழிபடத் தொடங்கினர். நிலத்திலிருந்து வெளிவந்த அன்னையின் அருளாட்சி தொடங்கியது.

ஒருமுறை மன்னன் நோய்வாய்ப்பட, கோயிலுக்கு வந்த அரசி தன் தாலியைக் கையிலேந்தி, மடிப்பிச்சை கேட்டு அழுது மயங்கினாள். மாரி மனமிறங்கி, மன்னனின் பிணி தீர அருள்புரிந்தாள். அன்றிலிருந்து மக்கள் அம்மனை "நித்ய சுமங்கலி மாரியம்மன்' என்ற திருப்பெயரில் அழைத்தனர்.

"திருமணத் தடை நீங்க, தம்பதிக்குள் ஒற்றுமையின்மை மறைய, வாழ்க்கை பிரச்னைகள் தீர, கருத்து வேறுபாடு மறைய, துணைவருக்கு ஆயுள் பலம் கூட குடும்பத்துடன் வந்து அம்மனை வேண்டினால், விரும்பியது நடக்கும்.

அம்மனை வழிபட, அம்மை, அக்கி, காய்ச்சல் முதலான வெம்மை நோய்கள் நீங்கும். கோயில் கிணற்றில் இருந்து குடத்தில் தண்ணீரை எடுத்துவந்து, வேம்புக் கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக் கொண்டால், பயம், சோர்வு, கலக்கம் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நீங்கும். அம்மனை வழிபட்டு, அம்மனின் பாதச்சுவடு பதிக்கப்பட்ட ஊஞ்சலை மூன்று முறை ஆட்டிவிட்டு, பிரார்த்தித்தால், குறைகள் களையும்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலில் வேப்பங்கம்பம், செல்லாண்டியம்மன், வினை தீர்க்கும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன.

கோயில்களில் பெரும்பாலும் திருவிழாக்களின்போது மட்டும்தான் வேப்ப மரத்தால் கம்பம் நடப்பட்டு, அதனைச் சிவனாக பாவித்து திருக்கல்யாணம் முதலான வைபவங்கள் நிகழும். திருவிழா முடிந்ததும் அந்த கம்பம் நீர்நிலைகளில் சேர்க்கப்பட்டு

விடும். ஆனால், இந்தக் கோயிலில் கம்பம் சிவனாகவே பாவிக்கப்பட்டு, இங்கு அருள்பாலிக்கிறார்.

கோயிலில் காலையில் எட்டரை மணிக்கு காலச்சந்தி பூஜையின்போது 16 வகைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம், இரவு எட்டரை மணிக்கு அர்த்தஜாம பூஜை என இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மஞ்சள் புடவைகள், மஞ்சள் கயிறு என பிரார்த்தனைக்காகச் சார்த்துகிறார்கள். விழாக் காலங்களில் அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சிணம், தீ மிதித்தல் போன்ற பிரார்த்தனைகள் பக்தர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனி மாதத்தில் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை, ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த ஆண்டு ஐப்பசி தேர்த் திருவிழா அக்டோபர் 22}இல் தொடங்கியது. நவம்பர் 24 வரை ஒவ்வொரு சமூகமும், குழுவும் பங்கு பெறும் கட்டளைகள் வழிபாடு தவறாமல் நடைபெறும்.

நவம்பர் 4-இல் பூவோடு எடுத்தலும், 5}இல் கொடியேற்றமும், 7-இல் அக்கினி குண்டம் ஏந்துதலும், 9}இல் சப்தாவர்ணமும் நடைபெறுகின்றன.

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது.

பெருந்தமிழன் பூதத்தாழ்வார்

தமிழ்நாட்டில் 1,300 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் சிறப்பை எடுத்துக் கூறும் கலைக்கூடமாக மாமல்லபுரம் விளங்குகிறது. குடைவரைக் கோயில்கள், ஒற்றைக் கல் ரதங்கள், கடற்கரைக் கோயில், சிற்பங்கள... மேலும் பார்க்க

நலம் அளிக்கும் நகரீசுவரர்

"கல்வியில் கரையில்லாத காஞ்சி மாநகர்' எனப் போற்றப்படும் காஞ்சிபுரத்தில் வழிபாடு சிறப்புமிக்க பல திருக்கோயில்களில் ஒன்று நகரீசுவரர் கோயிலாகும். கருவறையில் இறைவன் லிங்க வடிவில் எழுந்தருளி அருள்புரிகின்றா... மேலும் பார்க்க

மிளகைப் பயறாக்கிய திருப்பயத்தங்குடி நாதர்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகாரும், நாகப்பட்டினமும் புகழ்பெற்ற துறைமுகங்களாகும். இங்கு அரபு நாடுகளிலிருந்து பாய்மரக் கப்பல்களில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு, அதற்கு ஈடாக மிளகு ஏற்றுமதி செய்... மேலும் பார்க்க