மிளகைப் பயறாக்கிய திருப்பயத்தங்குடி நாதர்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகாரும், நாகப்பட்டினமும் புகழ்பெற்ற துறைமுகங்களாகும். இங்கு அரபு நாடுகளிலிருந்து பாய்மரக் கப்பல்களில் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு, அதற்கு ஈடாக மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்த மிளகு சேர நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டு, சாலை வழியாகக் கொண்டு வரப்பட்டது. இதனால் அரசு தன் வருவாயைப் பெருக்க, மிளகு ஏற்றுமதிக்கு அதிக அளவில் சுங்கவரி விதித்தது.
சிவனடியாரான வணிகர் ஒருவர், மிளகு மூட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு திருப்பயத்தங்குடி வழியாக வந்து கொண்டிருந்தார். அவ்வூரின் எல்லையில் சுங்கச்சாவடி இருப்பதை அறிந்த அவர், புதிதாக வணிகம் தொடங்கியதால் அதிகவரி செலுத்தினால் தனக்கு பெரும் இழப்பு ஏற்படும் என பயம் கொண்டார். அவர் திருப்பயத்தங்குடியில் சிவாலயம் அமைந்துள்ளதைக் கேள்வியுற்று மனம் மகிழ்ந்து, இறைவனிடம் மனமுருகி வேண்டினார்.
"இறைவனே! சுங்கவரி செலுத்தினால் எனக்குப் பேரிழப்பு ஏற்படும். தங்கள் கருணையால் மிளகை பயறு மூட்டைகளாக மாற்றி, சுங்கச்சாவடி கடந்தவுடன் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றித் தரவேண்டும்' என வேண்டினார். அன்றிரவு தனது வண்டியுடன் கோயிலிலேயே தங்கி விட்டார். மறுநாள் காலையில் வணிகர் தனது மூட்டைகளைச் சோதித்துப் பார்த்தபோது, அவை அனைத்தும் பயறு மூட்டைகளாக மாறியிருந்தன. சுங்கச் சாவடியில் வரி விதிக்காமல், வண்டி கடந்து சென்றது. துறைமுகம் சென்றதும், பயறு மூட்டைகள் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின. வணிகர் மிளகு விற்ற செல்வத்தின் பெரும் பகுதியை இறைவனுக்கே தொண்டு செய்து இறையருள் பெற்றார். அவரது வணிகமும் பலமடங்கு பெருகியது.
சிவனடியாருக்கு மனமிறங்கிய இறைவன் மிளகைப் பயறாக மாற்றியதால், "திருப்பயற்றூர்' என இத்தலம் போற்றப்படுகிறது. இந்த ஊரே தற்போது "திருப்பயத்தங்குடி' என அழைக்கப்படுகிறது.
கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. வாயிலின் இருபுறமும் சுவர்களின் மீது நந்தி வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. தென்புற வாயில் ஒன்றும் உள்ளது.
தெற்கிலும் மேற்கிலும் நந்தவனம் அமைந்துள்ளது. கிழக்கு வாயில் வழியாகச் சென்றால் பலிபீடமும் நந்தியும் காணப்படுகின்றன.
தட்சிணாமூர்த்தியின் முன்பாக சிலந்தி மரமானது தலவிருட்சமாக அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்தியின் இருபுறமும் இரு முனிவர் வடிவங்களும் அவர்களுக்கு மேலே இரு பெண்கள் வடிவங்களும் அமைந்துள்ளன. கிழக்கே தண்டாயுதபாணி சுவாமி சந்நிதி அமைந்துள்ளது.
மேற்குச் சுற்றில், கிழக்கு நோக்கிய சித்தி விநாயகர் கோயிலும், அதன் இடப்புறம் முருகன், வள்ளி, தெய்வானை சந்நிதியும் அமைந்துள்ளன. அதனருகே மற்றொரு சந்நிதியில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வடக்கே விசாலாட்சி உடனுறை விசுவநாதர் அருள்பாலிக்கிறார். மகாலட்சுமி, கஜலட்சுமி திருவுருவங்கள், வீரமாகாளி சந்நிதி ஆகியனவும் அமைந்துள்ளன. வடசுற்றில் தண்டாயுதபாணி, பைரவர், சூரியன் சந்நிதிகள் அமைந்துள்ளன. தென்கோடியில் சோமாஸ்கந்தர், மகா கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
கோயிலில் முருகனுக்கு ஏராளமான திருவுருவங்கள் அமைந்துள்ளன. முன் மண்டபத்தில் அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மகாமண்டபம், அர்த்த மண்டபத்தைக் கடந்து இறைவன் கருவறை காணப்படுகிறது. மூலவர் திருப்பயற்றுநாதர் கிழக்கு முகமாகக் காட்சிதருகிறார். அம்பிகையின் கண்கள் காவி மலர்களை ஒத்திருப்பதால், அன்னை "காவியங்கண்ணி' என்று அழைக்கப்படுகிறாள்.
அம்பிகை நான்கு கரங்களுடன் இடது கை தொடையின் மீதும், மற்றொரு இடது கை தாமரை மலரைத் தாங்கியும், வலது கரங்களில் அபய முத்திரையும், மற்றொன்றில் ருத்திராட்ச மாலையும் கொண்டு காட்சியளிக்கிறாள். அம்பிகையின் செவிகளில் குழைகள் அழகுடன் அமைந்துள்ளன. "பிரம்ம தீர்த்தத்தில் குளித்து அம்பிகையை வழிபட்டால் கண்நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
வியாபார வளர்ச்சிக்கு உகந்த தலமாக விளங்குவதால், வணிகர்களுக்கு ஏற்றம் தரும் தலமாகத் திகழ்கிறது.
கோயிலின் தலவிருட்சமாக சிலந்தி மரம் அமைந்துள்ளது. கருணா தீர்த்தமும் உள்ளது. கருவறை மேற்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டில், "பஞ்சநாதவாணன் என்பவருடைய கண்நோய் தீர திருச்சிற்றம்
பலமுடையானுக்கு சொந்தமாக அரை மா நிலம் வழங்கப்பட்டுள்ளது' என்பதை அறிய முடிகிறது.
நாகப்பட்டினம் அருகேயுள்ள, திருமருகல் ஒன்றியத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. விளப்பாறு என்னும் ஆற்றின் வடகரையில் திருப்பயத்தங்குடி அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி திருவிற்குடி, திருச்செங்காட்டான்குடி, திருக்கண்ணபுரம், திருமருகல், திருப்புகலூர் ஆகிய புகழ்பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
பனையபுரம் அதியமான்