ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 போ் கைது
நீட் விலக்கு: `உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கை'- அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதென்ன?
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சட்டமன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கிய கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அதிமுக நேற்றே அறிவித்திருந்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் திமுக அரசு நீட் தேர்வை வைத்து மோசடி அரசியல் செய்வதாக சாடியுள்ளது.
இந்த கூட்டத்தில், திமுக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக, மனிதநேய மக்கள் கட்சி, த.வா.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தீர்மானம்
இன்று (09.04.2025) மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு “நீட்” தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன் வடிவிற்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இந்த வகையில், “நீட்” தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது." எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

"நம்பிக்கைக் கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு"
இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், "நீட் விலக்கு தொடர்பான நம்முடைய போராட்டத்தின் அடுத்த கட்டமாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த சட்ட முன்வடிவுக்கு மாண்புமிகு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை, உள்துறை உயர் கல்வித் துறை என்று பல்வேறு அமைச்சகங்கள் கூறிய எல்லா விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது. ஆனால் இதையெல்லாம் ஏற்காமல் நம்முடைய மாணவர்களுக்கு பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நம்முடைய நீட் விலக்குச் சட்டத்துக்கு ஒப்புதலை மறுத்துவிட்டார்கள் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற பேரவையில் வேதனையோடு தெரிவித்து இருந்தேன்.
ஒன்றிய அரசு நம்முடைய கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடமும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன்.
எனவே அந்த வகையில் இந்த பிரச்னையில் அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான உங்களுடைய மேலான ஆலோசனைகளை நீங்கள் எல்லோரும் வழங்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நீட் தேர்வு என்பது ஏதோ விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நலனுக்காக யாரோ சிலர் தங்களின் சுயநலனுக்காக சொல்லி ஒன்றிய அரசை தவறாக வழி நடத்தி நடத்தும் தேர்வு அது. அதையும் முறையாக நடத்தவில்லை என்பதை பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்குகள் நடந்து வருவது உங்களுக்கு தெரியும் நாட்டுக்கும் நன்றாக தெரியும்.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நமது சட்ட போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." எனப் பேசியுள்ளார்.