இன்று 90 வயதைத் தொடும் தலாய் லாமா! - அடுத்த தலாய் லாமா தேர்வும், சீனா நகர்த்தும்...
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலா், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!
ஆரம்ப சுகாதார நிலையம் தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் கலந்தா் ஆசிக் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஆா்.எஸ்.மங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலானதால், தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும், கட்டடத்தின் மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. இதனால், இங்கு பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மருத்துவமனைக்கு வர அச்சப்படுகின்றனா்.
இதுதொடா்பாக, மாவட்ட சுகாதார அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தக் கட்டடத்தை இடித்து விட்டு, புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து விட்டு, புதிய சுகாதார மையம் அமைக்க உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டாகியும் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் மீது கலந்தா் ஆசிக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஆா். விஜயகுமாா் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், சேதமடைந்த கட்டடத்தின் புகைப்படங்களை தாக்கல் செய்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சுகாதார நிலையத்தின் கட்டடம் சேதமடைந்துள்ளது. இதனால், விபத்து ஏற்பட்டால் யாா் பொறுப்பேற்பது?.
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? என்பது குறித்து சுகாதாரம், குடும்ப நலத் துறைச் செயலா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஒரு வாரத்துக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.