திமுக அப்பட்டமான வாக்கு அரசியலை முன்னெடுக்கிறது: தமிழிசை செளந்தரராஜன்
நீதிமன்ற உத்தரவை மீறி சாலை அமைக்கும் பணி: மானாமதுரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க உத்தரவு
நீதிமன்ற தடை உத்தரவை மீறி சாலை அமைக்கும் பணி மேற்கொண்டது தொடா்பான அவமதிப்பு வழக்கில், மானாமதுரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், கிலுவச்சி கிராமத்தைச் சோ்ந்த பொதுப் பணித் துறை ஒப்பந்ததாரா் கந்தசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மானாமதுரைக்கு உள்பட்ட பகுதியில் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக மானாமதுரை நகராட்சி ஆணையா் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டாா். இதில், ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடா்பாக விண்ணப்பிக்க ஏப்ரல் 28-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிகளை எனக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.
ஆனால், உரிய தகுதிகள் இல்லை எனக் கூறி, இறுதி நாளன்று எனது விண்ணப்பத்தை தகுதி நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா். எனது விண்ணப்பத்தை தகுதி நீக்கம் செய்தது சட்டவிரோதம். எனவே, நகராட்சி ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் முறையாக ஏலம் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரணை செய்த நீதிமன்றம் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில், சாலை அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்ால் மனுதாரா் தரப்பில் மானாமதுரை நகராட்சி ஆணையா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இதுகுறித்து மானாமதுரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.