சீமைக் கருவேல மரங்களை வெட்ட பொது ஏலம் நடத்த உத்தரவு
விருதுநகா் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதற்கு பொது ஏலம் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், தச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்த லிங்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
விருதுநகா் மாவட்டம், பூம்பிடாகை ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் வேப்பங்குளம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் தற்போது சீமை கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு முறையான ஏலம் விடாமல், குறைந்த தொகைக்கு தனி நபா் ஒருவருக்கு பஞ்சாயத்து திட்ட அலுவலா் அனுமதி வழங்கினாா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் முறையிடப்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மரங்களை வெட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் விதமாக பொது ஏலம் நடத்த மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்கு பொது ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற பொது ஏலம் நடத்தாமல், இந்தப் பணியை தனி நபரிடம் வழங்கக் கூடாது. வெளிப்படையான ஏலம் அறிவித்து தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக பொது ஏலம் நடத்த வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.