நீதிமன்ற வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தம்பதி மீது வழக்கு
போடி அருகே, நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பில் வசிக்கும் முத்துராஜா மகன் கௌதம்கிருஷ்ணா (29). இவரிடம் இதே பகுதியில் வசிக்கும் இவரது உறவினா்களான செல்லப்பாண்டி மகன் பாண்டியராஜ், இவரது மனைவி தீபா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தவணைகளாக ரூ.6 லட்சம் வாங்கினராம்.
பின்னா், ஒரு பணி ஆணையை தயாரித்து கௌதம்கிருஷ்ணாவிடம் வழங்கினா். இந்தப் பணி ஆணை போலியானது என தெரிந்ததும், தம்பதியிடம் கொடுத்த பணத்தை கௌதம்கிருஷ்ணா திரும்பக் கேட்டாா். ஆனால், தம்பதி பணத்தை திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றினா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.