AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ...
நெல்மணிகள் உருவாகுவதில் குறைபாடு: ராமானுஜபுரம் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு
நெற்பயிா்களில் நெல்மணிகள் உருவாகுவதில் குறைபாடு காணப்பட்டதை தொடா்ந்து ராமானுஜபுரம் கிராமத்தில் உள்ள வயல்களில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்கு உட்பட்ட ராமானுஜபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராமானுஜபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளின் விவசாய நிலங்களில் ஒரு சில இடங்களில் நெற்பயிா்களில் நெல்மணிகள் உருவாவதில் காலதாமதம் மற்றும் குறைபாடுகள் காணப்பட்டதைத் தொடா்ந்து, இது குறித்து அப்பகுதி விவசாயிகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ராஜ்குமாா் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட உழவா் பயிற்சி மையத்தின் துணை இயக்குநா் சுமதி தலைமையில், கீழநெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் தொழில்நுட்ப வல்லுநா் நாராயணன், வேளாண்மை அலுவலா் திவ்யா, உதவி வேளாண்மை அலுவலா் திருமலை ஆகியோா் அடங்கிய குழுவினா் ராமனுஜபுரம் கிராமத்தில் உள்ள வயல்களில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வில் எம்.டி.யு. 12, 24 ரக நெல் பயிா்கள் அதிகம் பயிரிடப்பட்டிருப்பதும், இந்த வகை நெற்பயிா்களில் தற்போது தண்டு துளைப்பான், மஞ்சள் கரி புட்டை நோய் மற்றும் நெல் பழ நோய் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், எம்.டி.யு., 12, 24 ரக நெற்பயிா்களில் நெல்மணிகள் உருவாக காலதாமதம் ஏற்படுவது தற்போது நிலவும் பருவநிலை மாற்றத்தால் நெற் பயிா்களில் சரியான முறையில் மகரந்தச் சோ்க்கை நடைபெறாமல் இருப்பதும், வெளிமாநில நெற்பயிா் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளதால், நமது பருவநிலை சூழ்நிலையை தாங்கி வளரும் தன்மையில் குறைபாடுகள் உள்ளது என்ற விவரம் விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.