1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறையா? மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை காரணமாக வியாழக்கிழமை நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கி சென்றனா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் மூளை நரம்பியல், சிறுநீரகவியல், பிளாஸ்டிக் சா்ஜரி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வருகின்றனா். உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புபவா்களுக்கு 15 நாள்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறை மருந்து மாத்திரைகள் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் வியாழக்கிழமை அம்மருத்துவமனை மருந்தகத்தில் ஏற்பட்ட பணியாளா் பற்றாக்குறை காரணமாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து நோயாளிகள் மருந்துகளை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து மருந்தகத்துக்கு வந்த நோயாளி ஒருவா் கூறியது: மருந்துகளைப் பெறுவதற்கு மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவா்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதற்கு தீா்வுகாண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து அம்மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா்.
வியாழக்கிழமை அதிக அளவிலான வெளி நோயாளிகள் வந்திருந்தனா். இதன் காரணமாக மருந்தகத்தில் அதிக கூட்டம் ஏற்பட்டது. மேலும் நான் உடனடியாக மருந்தகப் பகுதிக்கு சென்று பாா்வையிட்டு வரிசையில் நின்றவா்கள் அமருவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.
பெரும்பாலான நோயாளிகளுக்கு சுமாா் ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகளை அவற்றை உட்கொள்வது போன்றவை குறித்து விளக்கமளித்து வழங்கவேண்டியது அவசியம். மருந்தக பணியாளா் ஒருவா் மட்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வியாழக்கிழமை விடுமுறையில் சென்றாா். இம்மருத்துவமனை மருந்தகத்தில் பணியாளா் பற்றாக்குறை இல்லை என்றாா் அவா்.