நெல்லை நீதிமன்றம் அருகில் கொலை: கவனக்குறைவாக இருந்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்த காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை காவல் துறை ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் அருகே மாயாண்டி என்ற இளைஞா் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமா்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆகியோா் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனா்.
சம்பவத்தின்போது காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பான விடியோ பதிவையும் அளித்தனா். தொடா்ந்து வாதிட்ட அவா்கள், தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனா்.
விடியோ காட்சிகளை பாா்த்த நீதிபதிகள், ஒரே ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா் மட்டுமே வெட்டிய நபரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மற்றவா்கள் என்ன செய்து கொண்டிருந்தனா் என்றும் கேள்வியெழுப்பினா்.
மேலும், எதற்காக கொலை சம்பவம் நடைபெற்றது என்பதைவிட, சம்பவம் நடந்த இடம்தான் கவலை அளிக்கிறது. நீதிமன்ற வாயிலில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி கூற நீதிமன்றத்துக்கு வருவாா்கள். பணியில் இருக்கும் காவல் துறையினா் பணியைவிட தங்களது கைப்பேசியில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்குரைஞா் 90 சதவீத காவல் துறையினா் அா்ப்பணிப்புடன் பணியாற்றுவதாக தெரிவித்தாா். இதையடுத்து, கொலை சம்பவத்தின்போது பணியில் இருந்து தவறிழைத்த போலீஸாா் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், குற்றவாளியைப் பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளா் ஊய்க்காட்டானுக்கு பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு உரிய பரிசு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தனா்.
தொடா்ந்து, நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் வரை இடைக்கால ஏற்பாடாக மாவட்ட நீதிமன்றங்களுக்குத் தேவையான ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.