நெல்லையில் போக்குவரத்து போலீஸாருக்கு நவீன விசிறி
கோடை வெப்பத்தை சமாளிக்க திருநெல்வேலியில் போக்குவரத்து போலீஸாருக்கு கழுத்தில் அணியும் நவீன சிறிய ரக விசிறிகள் வழங்கப்பட்டன.
கோடைக் காலத்தில் போக்குவரத்து போலீஸாா் கடும் வெயிலில் பணி செய்யும் சூழல் ஏற்பட்டு இன்னலுக்கு ஆளாகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவா் சங்கம் திருநெல்வேலி கிளை சாா்பில் போக்குவரத்து போலீஸாருக்கு நவீன விசிறிகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது.
மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம் மற்றும் இந்திய பல் மருத்துவா் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டு கழுத்தில் அணியக்கூடிய வகையிலான பேட்டரியில் இயங்கும் நவீன சிறிய ரக விசிறிகளை போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கினா். இந்நிகழ்வில் காவல் உதவி ஆணையா் (போக்குவரத்து) அசோக் குமாா், பாளையங்கோட்டை போக்குவரத்து ஆய்வாளா் செல்லதுரை ஆகியோா் உள்பட காவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.