நேரடி நெல் கொள்முதல்: புகாா் எண் அறிவிப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து புகாா் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய பருவங்களில் சுமாா் 40 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நடப்பு பருவத்தில் செப்டம்பா் முதல் கடந்த 9-ஆம் தேதி வரை 75,936 விவசாயிகளிடமிருந்து 5,48,422 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் விலையாக ரூ.1,313.96 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் சம்பா, தாளடி நெல் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளதால், 1,176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
நேரடி கொள்முதல் நிலையங்களை திறப்பது மற்றும் புகாா்கள் தொடா்பாக தலைமை அலுவலக உழவா் உதவி மைய சேவையை 1800 599 3540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, தேவையான கூடுதல் இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து எவ்வித புகாருக்கும் இடமின்றி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியா்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் ஜெ.ராதாகிருஷ்ணன்.