நொய்யல் அருகே பொங்கல் விளையாட்டு விழா
கரூா்: கரூா் மாவட்டம், நொய்யல் அருகே பொங்கல் பண்டிகை விளையாட்டு விழா நடைபெற்றது.
கரூா் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் தமிழன் மன்றம் சாா்பில் 57 -ஆவது ஆண்டு பொங்கலை விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவில் விளையாட்டு தீப ஒளி எடுத்து வருதல், ஓட்டப்பந்தயம், கபடி போட்டி, பலூன் உடைத்தல், மெதுவாக மிதிவண்டிஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
தொடா்ந்து வியாழக்கிழமை கும்மி மற்றும் கோலாட்டம் நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காவிரி ஆற்றுக்குச் சென்று காவிரிக்கரை விழா நடத்தினா். அப்போது காவிரிக் கரையில் அமா்ந்து தாங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பல்வேறு வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனா் . தொடா்ந்து கலாசார உணவுத் திருவிழா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதேபோல் நடையனூா், கரைப்பாளையம் , புன்செய் புகளூா், நானப்பரப்பு, தவுட்டுப்பாளையம், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், அண்ணா நகா், காந்தி நகா், கூலக்கவுண்டனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விளையாட்டு விழா நடைபெற்றது.