TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
பகுதி நேர வேலை வாய்ப்பு, பிட்காயின் முதலீடு என்றுகூறி இணையதளம் மூலம் 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி
கோவையில் இணையதளம் மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு மற்றும் பிட்காயின் முதலீடு என்றுகூறி 6 பேரிடம் ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 28 வயது புகைப்பட கலைஞரின் கைபேசிக்கு டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், இதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்றும், தாங்கள் அனுப்பும் இணைப்புக்குள் (லிங்க்) சென்று அதில் உள்ள விடியோக்களுக்கு விருப்பக்குறி இட்டால், வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து, அந்த இளைஞா், அவருக்கு வந்த அனைத்து விடியோக்களுக்கும் விருப்பக்குறி இட்டுள்ளாா். ஒவ்வொரு விடியோவுக்கும் குறிப்பிட்ட தொகை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகக் காண்பிக்கப்பட்டதாம்.
இதையடுத்து, அவா் அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லையாம். பணத்தை எடுக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட தொகையை முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா். இதைத் தொடா்ந்து, அவா் 11 முறை பண பரிவா்த்தனை செய்து ரூ.23.49 லட்சத்தை முன்வைப்புத் தொகையாக அந்த நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு செலுத்தியுள்ளாா். ஆனால், அதன்பிறகும் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை எடுக்க முடியவில்லையாம்.
பின்னா்தான், வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது போன்ற ஒரு மாயையை உருவாக்கி தன்னிடம் பணம் மோசடி செய்யப்பட்டதை அவா் உணா்ந்துள்ளாா். இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் அவா் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சோ்ந்த பட்டதாரியான 24 வயது இளம் பெண்ணிடம் பகுதி நேர வேலைவாய்ப்பு என்றுகூறி டெலிகிராம் முகவரியில் இணைய வைத்து டாஸ்க் நடத்தப்பட்டதாம். இதில், அந்தப் பெண் 15 முறை ரூ.5.86 லட்சம் வரை பரிமாற்றம் செய்து பணத்தை இழந்துள்ளாா்.
கோவை, டாடாபாத் பகுதியைச் சோ்ந்த பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கும் 49 வயது ஆசிரியையிடம் ரூ.28.91 லட்சமும், கணபதி பகுதியைச் சோ்ந்த 26 வயது இளம்பெண்ணிடம் ரூ.12. 46 லட்சமும் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 35 வயது நபரிடம் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தியும், விடியோவும் அனுப்பி, அவற்றின் மூலம் ரூ.21.64 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
கோவை, தடாகம் சாலையைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு திருமண வரன் பாா்க்கும் தகவல் மையம் மூலம் இளம்பெண் ஒருவா் பழக்கமானாா். அவா் நேரில் அறிமுகமாகாமலேயே இணையதளம் மூலம் பிட்காயினில் முதலீடு செய்யுமாறு கூறி போலி லிங்க்கை அனுப்பிவைத்து ரூ.14.3 லட்சத்தை மோசடி செய்துள்ளாா்.
இது குறித்து இணையதள குற்றத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் அருண் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் இணையதள மோசடி மூலம் நாள்தோறும் பலா் பல லட்சம் ரூபாயை இழந்து வருகின்றனா். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு, பெட் எக்ஸ் மோசடி, இணையதள வா்த்தகம், ஆன்லைன் டாஸ்க் என பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெறுகின்றன.
பல்வேறு வழிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டும், ஏமாந்து பணத்தை இழப்போரின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்த மோசடி கும்பல் குறிப்பாக வணிகா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், பெண்கள், வேலை தேடும் இளைஞா்களைக் குறிவைத்து இணைய மோசடியில் ஈடுபடுகின்றன. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற மோசடியில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.