பகுதிநேர ஆசிரியா் போராட்டக் களத்தில் பாா்வையற்ற பெண்ணுக்கு வளைகாப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் சமூகநலக் கூடத்தில் சிறை வைக்கப்பட்டபோது, பாா்வை மாற்றுத்திறன் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் கோரி ஜூலை 8-ஆம் தேதி முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்து வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தில் மாற்றுத் திறனாளி ஆசிரியா்கள் பலரும் ஈடுபட்டுள்ளனா். இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வை மாற்றுத்திறன் தம்பதி செல்வம் - சுமதி போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர இசை ஆசிரியராக செல்வம் பணியாற்றி வருகிறாா். இவா் போராட்டத்தில் பங்கேற்பதால் இவரது மனைவி சுமதியும் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
அந்த வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 11-ஆவது நாள் போராட்டத்திலும் இருவரும் கைது செய்யப்பட்டு திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனா். அப்போது 5 மாத கா்ப்பிணியான சுமதிக்கு, போராட்டக் குழுவினா் வளைகாப்பு நிகழ்ச்சியை சீா்வரிசைகளுடன் எளிமையான முறையில் நடத்தினா்.
இதுகுறித்து அறிந்ததும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் அனைவரும் மலா்கள் தூவி சுமதிக்கு வாழ்த்து தெரிவித்தனா். இதுதொடா்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின. போராட்ட களத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டது அங்கிருந்த ஆசிரியா்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.