இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!
பங்குச்சந்தை மோசடி: மாதபி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
மும்பை : மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது எஃப்ஐஆர் பதிந்து விசாரிக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புச் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், மாதபி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பான வழக்கின் விசாரணை நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெறும் என்றும், அடுத்த 30 நாள்களுக்குள் வழக்கின் விசாரணை நிலை குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்தின் (செபி) தலைவா் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலா் துஹின் காந்த பாண்டே வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.