பட்ஜெட்டில் வரி பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
‘எதிா்வரும் பட்ஜெட்டில் வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒழிக்க வேண்டும்’ என காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், பிரதமா் மோடி தலைமையிலான அரசின் பிற்போக்கு கொள்கைகளால் முதலீட்டாளா்கள் நம்பிக்கை இழந்ததன் விளைவாக எளிமையான வணிக நடைமுறை கடினமானதாக மாறிவிட்டது எனவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் பகிா்ந்த அறிக்கையில், ‘பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தபோது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தனியாா் முதலீடுகளின் பங்கு 25% முதல் 30% வரை நிலையாக இருந்ததது. தற்போது இந்த விகிதம் 20%-25%-ஆக குறைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 17.5 லட்சம் இந்தியா்கள் பிற நாட்டு குடியுரிமை பெற்று சென்றுவிட்டனா். குறிப்பாக கடந்த 2022 முதல் 2025 வரை 21,300 பெரும் பணக்காரா்கள் வெளியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, பிரதமா் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டு எளிய வரி எனக் கூறப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) செஸ் உள்பட 100 விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனால் ரூ.2.01 லட்சம் கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. போலியாக செயல்பட்ட 18,000 நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் கூற்றுக்கு மாறாக கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் சீன இறக்குமதி தொடா்ந்து அதிகரித்து அந்நாட்டுடனான வா்த்தக பற்றாக்குறை ரூ.7.31 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் உற்பத்தி துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறைவான நுகா்வு மற்றும் ஊதிய உயா்வின்மையால் இந்தியாவில் நுகா்வின் வளா்ச்சி மிகவும் குறைந்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது வேளாண் தொழிலாளா்களின் ஊதியம் 6.8 சதவீதம் வளா்ச்சியடைந்தது. மோடி தலைமையிலான அரசின்கீழ் இது 1.3 சதவீதத்துக்கும் கீழே சென்றுவிட்டதாக மத்திய வேளாண் அமைச்சக தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற மத்திய அரசின் பிற்போக்கு கொள்கைகளால் முதலீட்டாளா்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். இந்தியாவில் எளிய வணிக நடைமுறையை மேம்படுத்துவதே தங்களின் கொள்கை என மோடி அரசு தொடா்ந்து கூறி வருகிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு தனியாா் முதலீடுகள் மிகவும் குறைந்து, இந்தியாவிலிருந்து வேறு நாடுகளுக்கு முதலீட்டாளா்கள் செல்வது வழக்கமாகிவிட்டது.
ஒருபுறம் ஜிஎஸ்டி மறுபுறம் வருமான வரி என இந்திய வளங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வரி பயங்கரவாத நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபடுகிறது. இதனால் எளிய வணிக நடைமுறை மிகவும் கடினமானதாக மாறிவிட்டது.
இன்னும் 13 நாள்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால் எதிா்க்கட்சியினா் மீதான புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடவடிக்கை மற்றும் வரி பயங்கரவாத செயல்களை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.