பட்னாவிஸ் - ஷிண்டே : போட்டிக் கூட்டம்; பாதுகாப்பு குறைப்பு - அதிகரிக்கும் அதிகாரப் போட்டி
மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். அதற்கு முன்பு முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தேர்தலுக்கு பிறகு துணை முதல்வராக பதவியேற்றார்.
2022-ம் ஆண்டு சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே இரண்டாக உடைத்துக்கொண்டு வெளியில் வந்தபோது அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுத்தது. தற்போது திடீரென சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான உள்துறை அமைச்சகம் வெகுவாக குறைத்துள்ளது.
அதாவது சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 20 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை மாநில அரசு குறைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு ஒரு காவலரை மட்டும் நியமித்து இருக்கிறது. அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.

பாரபட்சமாக பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழக்கூடாது என்பதற்காக பா.ஜ.க மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்புதான் அதிக அளவில் குறைக்கப்பட்டு இருப்பதாக சிவசேனா குற்றம் சாட்டி இருக்கிறது. சிவசேனா முன்னாள் எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்து அதற்கு தக்கபடிதான் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர்.
சமீப காலமாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியில் இருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்து வந்தார். பா.ஜ.க டெல்லி தலைமை தலையிட்ட பிறகுதான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டிய கூட்டங்களில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்பதை தவிர்த்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசேனா அமைச்சர் உதய் சாமந்த் தலைமையிலான தொழில் துறையின் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார்.

அதோடு தொழில் துறை செயலாளர் அன்பழகன், கொள்கை முடிவு எடுக்கும்போது தன்னிடம் கலந்து ஆலோசிப்பதில்லை என்று உதய் சாமந்த் குற்றம் சாட்டி இருந்தார். இது ஏக்நாத் ஷிண்டேயிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. உடனே ஏக்நாத் ஷிண்டேயும் தனது பங்கிற்கு தொழில் துறை அதிகாரிகளை அழைத்து அத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே முதல்வர் நிவாரண நிதி என்ற ஒன்று இருக்கும் போது புதிதாக துணை முதல்வர் மருத்துவ நிதி ஒன்ற ஒன்றை ஏக்நாத் ஷிண்டே தொடங்கி இருக்கிறார். ஏக்நாத் ஷிண்டேயின் பிறந்தநாளையொட்டி தொடங்கப்பட்டுள்ள இந்த பிரிவுக்கு ஏக்நாத் ஷிண்டேயிக்கு மிகவும் நெருக்கமான மங்கேஷ் சிவாடே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புது பிரிவு முதல்வர் நிவாரண நிதிக்கு போட்டியாக அமைக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து சிவசேனா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் கூறுகையில், ''துணைமுதல்வர் மருத்துவ உதவி பிரிவு தொடங்கப்பட்டதை யாரும் அரசியலாக்க வேண்டாம்''என்று தெரிவித்தார். ஆனால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே அதிகாரப்போட்டி ஏற்பட்டிருப்பதாக தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் எம்.எல்.ஏ.ரோஹித் பவார் கூறுகையில்,''துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர், துணைமுதல்வருக்கு தனிப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது முதல்வர் நிவாரண நிதி போன்று, துணை முதல்வரும் மருத்துவ உதவி நிதியை தொடங்கி இருக்கிறார். மற்றொரு துணை முதல்வரும் இதே போன்று விரைவில் தொடங்குவார் என்று நினைக்கிறோம். இந்த அதிகாரப்போட்டி மேலும் சுவாரஸ்யமாக இருக்க 3 முதல்வர்கள் இருக்கவேண்டும். ஒவ்வொரு துறைக்கும் 3 அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்படவேண்டும்'' நையாண்டியாக விமர்சித்திருக்கிறார்.