பண மோசடி வழக்கு; ராபர்ட் வதேராவிற்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன்!
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கடந்த 2008ம் ஆண்டு ஹரியானா மாநிலம், குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் 3.5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை ராபர்ட் வதேரா ரூ.58 கோடிக்கு டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டார். இதில் ராபர்ட் வதேரா தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எஃப் நிறுவனத்திடமிருந்து சொத்துகளை வாங்க அதிக அளவில் சலுகை எதிர்பார்த்ததாகவும் 2011ம் ஆண்டு அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார். ஹரியானாவில் நிலம் வாங்கி விற்பனை செய்யப்பட்டதில் பணமோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது.

அமலாக்கப் பிரிவு இதற்காக ஏற்கனவே கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவிற்கு ஒரு முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சம்மனுக்கு ராபர்ட் வதேரா ஆஜராகவில்லை. இதையடுத்து இப்போது இரண்டாவது முறையாக அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருக்கிறது. முதல் முறை ஆஜராகாத காரணத்தால் இப்போது கட்டாயம் ஆஜராக வேண்டிய கட்டாயத்தில் ராபர்ட் வதேரா இருக்கிறார். அமலாக்கப் பிரிவின் இந்த நோட்டீஸை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். ஹரியானாவில் சட்டவிரோத நில வர்த்தகம் தொடர்பாக முன்னாள் முதல்வர் புபிந்தர் ஹோடா, ராபர்ட் வதேரா போன்றவர்கள் ஈடுபட்டதாக சி.பி.ஐ யும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத நில வர்த்தகம் மூலம் ராபர்ட் வதேரா ரூ.50 கோடி அளவுக்கு ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு பணமோசடி வழக்கில் ராபர்ட் வதேரா ஒரு முறை அமலாக்கப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.