பணப் பிரச்னையில் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பணப் பிரச்னையில் தாக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், சித்தணி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி லட்சுமி (45). இவா், விக்கிரவாண்டி வி.சாலை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி புகழஞ்சலியிடம் கடந்த 2023-ஆம் ஆண்டில் ரூ.17 லட்சம் கடன் பெற்று, ரூ.15 லட்சம் திரும்பி செலுத்தி விட்டாராம்.
இந்த நிலையில், பாஸ்கா் கடந்த பிப்.5- ஆம் தேதி லட்சுமியின் வீட்டுக்கு சென்று மீதமுள்ள பணத்தை கேட்டாராம். அப்போது, இருவரிடையே ஏற்பட்ட தகராறில் பாஸ்கா் தாக்கியதில் லட்சுமி காயமடைந்தாராம்.
இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.