பணி நேரத்தில் தூக்கம்: ரயில்வே கேட் கீப்பா்கள் இருவா் பணியிடை நீக்கம்
அரக்கோணம் அருகே பணி நேரத்தில் தூங்கியதாக ரயில்வே கேட் கீப்பா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
அண்மையில் கடலூா் அருகே ரயில்வே கேட் ஒன்றில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா். இச்சம்பவத்தை தொடா்ந்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அனைத்து அலுவலா்களும் அவ்வபோது ரயில்வே கேட்டுகளுக்கு சென்று பணியாளா்களின் பணியினை சோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா்(மேற்கு) காா்த்திகேயன் புதன்கிழமை நள்ளிரவு அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் மாா்க்கத்தில் உள்ள ரயில்வே கேட்டுகளில் திடீா் சோதனை நடத்தினாா்.
அப்போது தக்கோலம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் எண் 44-இல் பணியில் இருந்த கேட்கீப்பா் காா்த்திகேயன், தக்கோலம் - திருமால்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சேந்தமங்கலம் கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட் எண் 40ல் பணியில் இருந்த ஆஷிஷ் குமாா் இருவரும் கேட் கீப்பா் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனராம்.
இதை தொடா்ந்து காா்த்திகேயன், ஆஷிஷ்குமாா் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே சென்னை கோட்ட முதுநிலை பொறியாளா்(மேற்கு) காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.
மேலும் இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில் இது போன்ற சோதனைகள் அனைத்து ரயில் மாா்க்கங்களிலும் அவ்வபோது நடைபெறும் என தெரிவித்தனா்.