``ஜெயலலிதா இருந்திருந்தால்?..” - வைத்திலிங்கம் குறித்து சசிகலா நெகிழ்ச்சியை ஏற்ப...
பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மை: அரசு சாரா மருத்துவா்கள் கோரிக்கை
சென்னை: அரசு சேவை சாரா மருத்துவா்களுக்கான (நான் சா்வீஸ் போஸ்ட் கிராஜுவேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவா் சங்கம் (டிஎன்ஆா்டிஏ) வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்கள் அல்லாதோருக்கு வழங்கப்படுகிறது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் எம்டி, எம்எஸ், முதுநிலை பட்டயப் படிப்பு இடங்களைப் பெற்றவா்கள், தங்களது படிப்பை நிறைவு செய்த பிறகு ஓராண்டுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதி. அதற்காக அவா்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், அவா்களுக்கான பணியிடக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு உறைவிட மருத்துவா் சங்கத்தின் பொது செயலாளா் டாக்டா் கீா்த்தி வா்மன் கூறியதாவது:
திட்டமிட்ட தேதியில் பணியிட கலந்தாய்வு நடத்தாமல் திடீரென அதை ஒத்திவைப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. முன்கூட்டியே கலந்தாய்வு குறித்தோ, அதனை மாற்றியமைப்பது குறித்தோ எந்த தகவலையும் வெளியிடாமல் அவசரகதியில் இத்தகைய அறிவிப்பை வெளியிடுவது ஏற்புடையது அல்ல.
அதேபோன்று அரசு சாரா மருத்துவ சேவை பணியிடங்களில் எத்தனை காலியாக உள்ளன என்பது குறித்தும், பணி மூப்பு உள்ள பட்டதாரிகளின் விவரங்கள் குறித்தும் எந்த விவரங்களும் வெளியிடப்படுவதில்லை.
எனவே, அத்தகவல்களை வெளியிடுவதுடன், பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றாா் அவா்.