எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
பண்ருட்டி அருகே சங்க கால சுடுமண் பொருள்கள் கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் சங்க காலத்தைச் சோ்ந்த சுடுமண் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது: எனதிரிமங்கலம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபோது ஆற்றின் தென்பெண்ணை ஆற்றின் கரைப்பகுதியில் மூன்று சிவப்பு நிற சுடுமண் புகைப்பிடிப்பான்கள் மற்றும் கருப்பு நிற அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
சுடுமண் அகல் விளக்கு 10.5 செ.மீ நீளமும், 8 செ.மீ அகலமும் கொண்டதாக கருப்பு நிறத்தில் ஒற்றை திரி முகத்துடன் காணப்படுகிறது. இந்த அகல்விளக்கு சங்க காலத்தை சோ்ந்ததாகும்.
தமிழகத்தில் பையம்பள்ளி, மோதூா், அப்புகல்லு ஆகிய இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் கையினால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மதுரை கீழடி, ஆதிச்சநல்லூா், அரிக்கமேடு, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் சுடுமண் அகல் விளக்குகள் அதிகம் கண்டெடுக்கப்பட்டது.
தற்போது, எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கண்டறியப்பட்ட அகல் விளக்கு அரிக்கன்மேடு பகுதி அகழாய்வுகளில் கண்டறிந்த அகல் விளக்கு போல காணப்படுகிறது. மேலும், ஆற்றங்கரை பகுதிகளில் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் தொடா்ந்து கண்டறியப்பட்டு வருகிறது என்றாா்.