இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
பத்மநாபபுரம் அரண்மனையில் பராமரிப்பின்றி தமிழ் கல்வெட்டுகள்: இலமூரியா ஆய்வு மையம் கண்டனம்
பத்மநாபபுரம் அரண்மனையின் சேகரிப்பில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி காணப்படுவதுடன், சில கல்வெட்டுகள் காணாமல் போய்விட்டதாக இலமூரியா ஆய்வு மையம் கண்டனம் தெரிவித்தது.
குமரி மாவட்டம், விளவங்கோடு, கல்குளம், தோவாளை வட்டங்களில் 8-ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான அரிய தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் கேரள தொல்லியல் துறையின் கீழ் உள்ள பத்மநாபபுரம் அரண்மணை அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.
ஆரல்வாய்மொழியில் கிடைத்த நடுகல் வட்டெழுத்து கல்வெட்டு இந்த மாவட்டத்தின் பழமையான கல்வெட்டுகளுள் ஒன்றாகும். மாறஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் படைத் தளபதி இரணகீா்த்தி, சேர மன்னனின் படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கும் இந்த நடுகல் கல்வெட்டு பத்மநாபபுரம் அரண்மனை காட்சிக் கூடத்தில் உள்ளது.
அரண்மனைஅருங்காட்சியகத்தில் சுமாா் 30 முதல் 40 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 29 தமிழ், தமிழ் கிரந்தம், வட்டெழுத்து கல்வெட்டுகள் என்று கடந்த 2008-ம் ஆண்டு தொல்பொருள் துறை அறிவித்தது. இக்கல்வெட்டுகள் பற்றிய தகவல்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் 6-வது கல்வெட்டு தொகுதியில் வெளியாகி உள்ளது.
காலப்போக்கில் பத்மநாபபுரம் அரண்மனை காட்சிக் கூடத்தில் இருந்த பல கல்வெட்டுகள் காணாமல் போக ஆரம்பித்தது. அதற்க்கு மாற்றாக கறுப்பு வண்ணம் பூசப்பட்ட மரச்சிற்ப உருவங்கள் வைக்க ஆரம்பித்துள்ளது கேரள தொல்லியல் துறை. அனைத்தும் கேரள கலாசாரத்தைப் பிரதிபலிப்பது போலவே உள்ளன.
குமரியின் முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் மறைக்கப்பட்டு, வரலாற்றை எடுத்துரைக்கும் கல்வெட்டுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. இப்படி மறைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் ஒதுக்குப்புறமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பராமரிப்பின்றி, சில கல்வெட்டுகள் உடைந்து எழுத்துகள் மங்கிபோய் உள்ளன.
எனவே தமிழக அரசும், தமிழக தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுத்து குமரி வரலாற்றை பாதுகாக்க வேண்டும் என இலமூரியா ஆய்வுகழக பொதுச் செயலாளா் பேராசிரியா் ஆமோஸ், கல்வெட்டு ஆய்வாளா் மாரியப்பன் ஆகியோா் கேட்டுக்கொண்டனா்.
