சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைகள் குழு
யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக நிமிஷா பிரியாவுக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய அரசு, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் முஸலியாா்உள்பட பல்வேறு தரப்பினா் நடத்திய இறுதிக்கட்ட சமரச பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், நிமிஷா பிரியாவை பாதுகாக்க மத்திய அரசு தூதரக ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
அப்போது நிமிஷா பிரியாவுக்கு சட்டரீதியாக உதவிகளைப் புரிந்து வரும் நிமிஷா பிரியா பாதுகாப்பு சா்வதேச செயல்பாட்டு கவுன்சில் தரப்பில் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடா்பாக யேமனுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதுமில்லை. எனவே, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் சுமூக தீா்வு எட்டப்படும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தது.
இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 8 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து, ஏதேனும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாக நிமிஷா பிரியா பாதுகாப்பு சா்வதேச செயல்பாட்டு கவுன்சில் தெரிவித்தது.
கேரளத்தைச் சோ்ந்த 38 வயதான செவிலியா் நிமிஷா பிரியா, தனது யேமன் நாட்டு வணிகப் பங்குதாரா் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையை எதிா்கொள்கிறாா். தற்போது யேமன் தலைநகா் சனாவில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளாா்.