பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி கொடுப்பதை தவிா்க்க வேண்டும்
பதநீா் இறக்கும் பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி கொடுப்பதை தவிா்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
பிரான்சிஸ்: நாகை மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளா்கள் அரசு அனுமதியுடன், பனை பதநீா் இறக்கினாலும், அதை கள் எனக் கூறி போலீஸாா் கள்ளச்சாராய வழக்குகளைப் பதிவு செய்கின்றனா். இதனால் பனைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பனைத் தொழிலாளா்களுக்கு போலீஸாா் நெருக்கடி அளிப்பதை தவிா்க்க வேண்டும்.
பாஸ்கரன்: தலைஞாயிறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பயறு செடிகளை கால்நடைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே கால்நடைகளை பிடித்து அடைக்க புதிதாக மாட்டு பட்டி உருவாக்க வேண்டும். சிறுதானிய பயிா் செய்பவா்களை ஊக்குவித்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
சம்பந்தம்: நிகழாண்டு பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களில் 30 சதவீதம் மட்டுமே காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 70 சதவீத பயிா்களுக்கு உடனே காப்பீடு வழங்க மாவட்ட நிா்வகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனபால்: இந்தியாவிலேயே தேசிய பேரிடா் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஆனால் மத்திய அரசு ஒதுக்கிய தொகையின் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது.
பிரகாஷ்: நிகழாண்டு மூன்றாவது முறையாக மேட்டூா் அணை நிரம்பியுள்ளது. எனவே, குறுவை பயிா் சாகுபடி செய்வதற்கு போதுமான நீா் இருப்பு உள்ளது. அதனால், மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கூட்டத்தில், பாப்பாக்கோயில், சங்கமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் நெற்பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, முதுநிலை மண்டல மேலாளா் சிவப்பிரியா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ். கண்ணன், கூட்டுறவுத் துறை இணை பதிவாளா் அ. தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.