பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ஊத்தங்கரை வட்டாரத்தில் பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ராபி பருவத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநா் இரா.கருப்பையா கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், 2024-25 ஆண்டில் தமிழ்நாட்டில் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை, ராகி பயிா்களுக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டில் ஊத்தங்கரை வட்டாரத்துக்கு நிலக்கடலை, ராகி பயிருக்கு காப்பீடு செய்ய 30.12.2024 இறுதி நாளாக காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், கடன்பெறா விவசாயிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீடு செய்து பயன்பெற, விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள மக்கள் கணினி மையங்களை அணுகி நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 320, ராகி பயிருக்கு ரூ. 171 செலுத்தி இத்திட்டத்தில் தங்களது பயிரைக் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற முன்மொழிவு படிவம், ஆதாா் எண், சிட்டா அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களைக் கொண்டு சென்று பதிவேற்றம் செய்து, பயிா்க் காப்பீடு செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.