சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
பரங்கிமலையில் மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷ் குற்றவாளி: மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்தனா். ஒரு கட்டத்தில் பெற்றோரின் கடும் எதிா்ப்பால் சதீஷுடன் பழகுவதை, பேசுவதை சத்யபிரியா நிறுத்தினாராம். இதனால் சதீஷ் ஆத்திரமடைந்தாா்.
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல வழக்கம் போல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த சத்யபிரியாவிடம் அங்கு நின்றிருந்த சதீஷ் வாக்குவாதம் செய்தாா். வாக்குவாதம் முற்றியதில் சத்யபிரியாவை தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் தள்ளி விட்டு தப்பிச் சென்றாா். இதில் சத்யபிரியா உயிரிழந்தாா். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்தனா். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன் நடைபெற்று வந்தது. சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 70 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சதீஷுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பு வழக்குரைஞா் கேட்டுக் கொண்டாா். கடந்த 24-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை டிச.27-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தாா்.
அதன்படி இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி ஸ்ரீதேவி, ‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தாா். சதீஷுக்கான தண்டனை விவரம் வரும் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டாா்.