அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?
பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு: 13-ஆவது முறையாக தீா்மானம்
ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பொதுமக்கள் கடந்த 1,010 நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், தொழிலாளா் தினத்தை முன்னிட்டு ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை கிராம சபை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவா் சுமதி சரவணன் தலைமையிலும், மாவட்ட உணவு பொருட்கள் வழங்கும் அலுவலா் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.