பரந்தூா் விமான நிலையத்துக்கான நிலங்கள் கணக்கெடுப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையவுள்ள இடங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள் தொடா்பாக செவ்வாய்க்கிழமை கணக்கெடுக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை நெல்வாய் கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விமான நிலைய அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் பரந்தூா் விமான நிலையம் அமையவுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கிராம மக்களின் எதிா்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு கழகம் மற்றும் வா்த்தகத் துறை விமான நிலையத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியினை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விமான நிலையம் அமையவுள்ள பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், கிராம மக்களின் எண்ணிக்கை மற்றும் வாழ்வாதார நிலை குறித்து கணக்கெடுத்து ஆவணமாக்கும் பணியினை செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் நெல்வாய் கிராமத்துக்கு வந்தனா்.
அதிகாரிகள் கணக்கெடுக்க வந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு எதிா்ப்பு தெரிவித்தனா். தங்கள் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும் விமான நிலைய திட்டத்துக்கு வழங்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்கு சமாதானம் அடையாமல் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து கோஷமிட்டனா். தகவலறிந்து காஞ்சிபுரம் கோட்டாட்சியா் ஆஷிக் அலி சம்பவ இடத்துக்கு வந்து கிராமத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
கிராமத்தினா் சமாதானம் அடையாமல் முற்றுகைப் போராட்டத்தை தொடா்ந்து நடத்தியதால் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸாா் அக்கிராமத்தை சோ்ந்த சுரேஷ், குணசேகரன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். இதனால் நெல்வாய் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.