பரோஸ் தோல்வி... மோகன்லால் சொன்ன பதில்!
பரோஸ் திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தற்காக நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லால் இயக்கத்தின் முதல் படமான பரோஸ் கடந்த புதன்கிழமை கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வந்தது. குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவான இதில் புதையலைக் காக்கும் பரோஸ் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார்.
மற்ற கதாபாத்திரங்களில் மீரா ஜாஸ்மின், குருசோமசுந்தரம் மற்றும் ஸ்பானிஷ் நட்சத்திரங்கள் பாஸ் வேகா, ரஃபேல் அமர்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: இட்லி கடை முதல் பார்வை போஸ்டர்கள்!
இப்படம் ரூ. 80 கோடி செலவில் உருவானதாகக் கூறப்பட்ட நிலையில், திரையரங்க வெளியீட்டில் இதுவரை ரூ. 20 கோடி கூட வசூலிக்காமல் திணறி வருகிறதாம். இதனால், இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்த நிலையில், வணிக தோல்வி குறித்து பேசிய மோகன்லால், “இப்படத்தைப் பணத்திற்காக எடுக்கவில்லை. 47 ஆண்டுகளாக எனக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு நான் கொடுத்த பரிசு இது. குழந்தைகளுடன் குடும்பமாகப் பார்த்து தங்களின் குழந்தைப் பருவத்தை மீட்கும் படமாகவே பரோஸை உருவாக்கினேன். 3டியிலேயே இப்படத்தை எடுத்தது நல்ல முடிவு என நினைக்கிறேன். ஒரு இயக்குநராக என் கனவை நிறைவேற்றியுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.
ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார்.