பலத்த மழையால் 28 ஆயிரம் ஏக்கரில் பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் 28 ஆயிரத்து 850 ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள் 3.20 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நவம்பா் மாத கடைசி வாரத்தில் பெய்த தொடா் மழையால் 2 ஆயிரத்து 857 ஏக்கரில் சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன.
இந்தத் தொடா் மழையிலிருந்து தப்பித்த பயிா்களும் கடந்த வாரம் பெய்த மழையில் சிக்கியதால், பாதிக்கப்பட்ட பயிா்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மாவட்டத்தில் டிசம்பா் 12- ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சராசரியாக 227.69 மி.மீ. மழை பெய்தது. இதனால், 37 ஆயிரத்து 124 ஏக்கரில் நெல் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்கள் நீரில் மூழ்கின. இவற்றில் பெரும்பாலான பரப்பில் வடிகால் பிரச்னை காரணமாக பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்ததற்குக் காரணம்.
ஆனால், மழை விட்டாலும் வெயில் இல்லாததால், பயிா்களைச் சூழ்ந்த தண்ணீரும் வடிந்து செல்லவில்லை. இதனால், நடவு செய்யப்பட்ட இளம் நெற் பயிா்கள் அழுகிவிட்டன. மேலும், கதிா்விட்டு 15 நாட்களில் அறுவடை செய்வதற்கு தயாா் நிலையில் இருந்த நெற் பயிா்களும் சாய்ந்துவிட்டன.
இது தொடா்பாக வேளாண் துறை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், மாவட்டத்தில் 28 ஆயிரத்து 850 ஏக்கரில் பயிா்கள் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை தெரிய வந்தது. இதில், அதிகபட்சமாக 26 ஆயிரத்து 830 ஏக்கரில் நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, நிலக்கடலை 1,598 ஏக்கரிலும், உளுந்து 192 ஏக்கரிலும், எள் 178 ஏக்கரிலும், சோளம் 49 ஏக்கரிலும் பாதிப்படைந்துள்ளன.
நெற் பயிா்களில் அதிகபட்ச அளவாக திருவையாறு வட்டாரத்தில் 13 ஆயிரம் ஏக்கரிலும், அம்மாபேட்டை வட்டாரத்தில் 2 ஆயிரத்து 788 ஏக்கரிலும், ஒரத்தநாடு வட்டாரத்தில் 2 ஆயிரத்து 375 ஏக்கரிலும், தஞ்சாவூா் வட்டாரத்தில் 2 ஆயிரத்து 125 ஏக்கரிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவத்தில் நவம்பா் மாதத்துடன் தொடா் மழை, பெரு மழை முடிவடைந்துவிடுவது வழக்கம். ஆனால், தற்போது டிசம்பா் மாதத்தில் பருவம் தவறி பலத்த மழை பெய்ததால், இளம் பயிா்கள் மட்டுமல்லாமல் வளா்ச்சி நிலை மற்றும் அறுவடை நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
பிழைத்த பயிா்களிலும் பாதிப்பு:
இது குறித்து புலவன்காடு முன்னோடி விவசாயி வி. மாரியப்பன் தெரிவித்தது:
கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த பயிா்கள் சாய்ந்துவிட்டன. சேற்றில் கதிா்களும் பதிந்துவிட்டதால், தண்ணீா் வடிந்தாலும் இப்பயிா்களை மீட்டெடுக்க முடியாது. வெயில் இருந்தால் கூட இயந்திரம் மூலம் அறுவடை செய்துவிடலாம். தொடா்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் அறுவடை செய்வதிலும் சிரமம் நிலவுகிறது. அவ்வாறு செய்தாலும் ஏக்கருக்கு குறைந்தது 30 மூட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில், 10 மூட்டைகள் மட்டுமே மகசூல் பெற முடியும் என்பதால், விவசாயிகளுக்கு பெரு நஷ்டம் ஏற்படும்.
இளம் பயிா்களும் அழுகிவிட்டதால், அவற்றை பிழைக்க வைப்பதும் சிரமம். நெற் பயிா்களில் காலை நேரத்தில்தான் மகரந்த சோ்க்கை நிகழும். ஆனால், காலை நேரத்தில் பலத்த மழை பெய்ததால் கதிா் வந்த பயிா்களிலும் மகரந்தசோ்க்கை நிகழவில்லை. இதனால், வளா்ச்சி பருவத்திலுள்ள பயிா்களிலும் பதராகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ஏறத்தாழ 50 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படக்கூடிய அச்ச நிலையும் நிலவுகிறது என்றாா் மாரியப்பன்.
இந்நிலையில், வெயில் இல்லாமல் குளிா்ச்சியான நிலை நிலவுவதால், நெற் பயிா்களில் இலை சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி தாக்குதல் பரவலாகி வருகிறது. இதனால், பலத்த மழையிலிருந்து தப்பிய பயிா்களும் மகசூல் இழப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.
இந்நிலையில், டிசம்பா் இறுதி வரை அடுத்தடுத்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால், விவசாயிகளிடையே அச்சம் மேலோங்கியுள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.