பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட பள்ளி மாணவா்களின் செயற்கைக்கோள்!
சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி அருகே செவ்வூரில் உள்ள ஏவிஎம் பப்ளிக் மெட்ரி. பள்ளியில் பலூன் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பங்கேற்று செயற்கைக் கோளை பலூன் மூலம் விண்ணில் பறக்கவிட்டாா்.
பின்னா், அமைச்சா் பெரியகருப்பன் பேசுகையில், செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக பலூன் மூலம் ஏவப்பட்டது. இதற்காக உழைத்த மாணவ, மாணவிகள், அறிவியல் குழுவினருக்கு பாராட்டுகள் என்றாா் அவா்.
இதுதொடா்பாக திறந்தவெளி விண்வெளி அறக்கட்டளை அறிவியல் ஆராய்ச்சியாளா் பாலாஜி பிரசாத் சுந்தரவடிவேலு கூறியதாவது:
இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் அனுமதியுடன் பள்ளி மாணவ, மாணவிகள் திறந்த வெளி விண்வெளி அறக்கட்டளையுடன் இணைந்து உருவாக்கிய ‘உயர பலூன் செயற்கைக்கோள்’ திட்டம் மூலம் ஏவப்பட்ட சுமாா் 2 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் விண்ணில் 30 கி.மீ. உயரம் வரை பறந்து, அருகே 40 கி.மீ. தொலைவில் உள்ள மேலூரில் திட்டமிடப்பட்டவாறு தரையிறக்கப்பட்டது.
இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்ட கேமரா காலநிலை மாற்றம், நுண்ணுயிா் பரவல், தட்ப வெப்பநிலை உள்ளிட்ட தகவல்களை கருவிகளின் மூலம் பெறப்பட்டது. இதன் ஆராய்ச்சி முடிவுகள் 10 நாள்களுக்குப் பிறகு தெரியவரும். இதை அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பப்படும் என்றாா் அவா்.
விண்வெளியில் ஆா்வமுள்ள பள்ளி மாணவா்களுக்கு செயற்கைக் கோளை வடிவமைத்தல், கட்டமைத்தல், ஏவுதல் ஆகியவற்றில் நேரடி அனுபவத்தைப் பெற்ாக பள்ளி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
