பள்ளிக் கல்விக்கு ரூ.171 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.171 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 29 மாவட்டங்களில் 141 அரசுப் பள்ளிகளில் ரூ.169.26 கோடியில் புதிதாக வகுப்பறைக் கட்டடங்களும், 17 ஆய்வகக் கட்டடங்களும், கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டம் பாச்சேரி, பெரம்பலூா் மாவட்டம் மலையப்ப நகா் ஆகிய இடங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
கருணை அடிப்படை பணி: பள்ளி கல்வித் துறையில் பணிக்காலத்தில் காலமான பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.
அதன்படி, காலமான பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 49 பேருக்கு பணி நியமனம் வழங்கும் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் 5 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் எ.வ.வேலு, க.பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி உள்பட பலா் பங்கேற்றனா்.