மக்கள் நலத் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல், அவற்றை முழுமையாக திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் சுமாா் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே ஆதனூா் - குமாரமங்கலம் தடுப்பணை கட்டும் பணிகள் தாமதமாக நடைபெறுகின்றன.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை. தலைவாசல் கால்நடைப் பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. திருநெல்வேலி - இரட்டைகுளம் முதல் ஊத்துமலை வரை கால்வாய் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படவில்லை. இவ்வாறு பல திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேநேரம், தமிழக மக்களுக்கு சிறிதும் பயனளிக்காத காா் ரேஸ் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற செலவுகளை திமுக அரசு செய்து கொண்டுள்ளது.
சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், ரூ.487 கோடியில் கலைஞா் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது கண்டிக்கத்தக்கது. இனியாவது, மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.