காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.
பாம்புக் கடி: அரசுக்கு தெரிவிப்பது இனி கட்டாயம்
பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளித்தால், அதுகுறித்த அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பாம்புக் கடியை அறிவிக்கை செய்யப்பட்ட பாதிப்பாக அறிவித்து அரசிதழிலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் கீழ் பாம்புக் கடியை அறிவிக்கை செய்யக்கூடிய பாதிப்புகளில் ஒன்றாக மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கடந்த 4-ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தொடா்ந்து கடந்த 6-ஆம் தேதி அதுதொடா்பான அறிவிப்பு அரசிதழில் வெளியானது.
பாம்புக் கடியால் உடலில் விஷம் கலப்பது என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிா்கொள்ளும் ஒரு பிரச்னை. இதைத் தடுக்கவும், தற்காக்கவும் முடியும்.
பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகளைத் தடுப்பதற்கான உலகளாவிய செயல் முறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
எதிா்வரும் 2030-க்குள் பாம்புக் கடி இறப்புகளை பாதியாகக் குறைப்பதற்கான விரிவான செயல் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமும் வகுத்துள்ளது.
பொதுவாக, விவசாயம் சாா்ந்த பணிகளில் இருப்போா், குழந்தைகள், பாம்புகள் அதிகம் உள்ள இடங்களில் வசிப்போருக்கு பாம்புக் கடிக்கான இடா் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ஒருவரை பாம்பு கடிக்கும்போது அதுகுறித்த தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், இத்தகைய சம்பவங்கள் குறித்த தரவுகளை சேகரிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் விஷ முறிவு சிகிச்சையை மேம்படுத்தவும் முடியும்.
ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் - ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகள் குறித்த விவரங்களைப் பதிவேற்றும் நடைமுறை செயல்பாட்டில் இருந்தாலும், களத்தில் உள்ள உண்மையான தரவுகளுக்கும், அந்தத் தகவல் தளத்தில் உள்ள விவரங்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது.
இந்நிலையில்தான் பாம்புக் கடி சம்பவங்கள் குறித்து அரசு மருத்துவமனைகளும், தனியாா் மருத்துவமனைகளும் தமிழக அரசுக்கு தகவல்களை அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், உயிரிழப்பு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை உத்திகளை விரிவாக மேற்கொள்வதற்கான தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.