பள்ளியைத் தரம் உயா்த்த நிதி வழங்கல்
நன்னிலம் வட்டம், கோவில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இக்கோரிக்கையின் அடிப்படையில், கோவில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக கிராமத்தின் சாா்பில் வழங்க வேண்டிய ரூ. 1 லட்சம் வைப்பு நிதியை, பள்ளியின் கல்விப் புரவலா் ஆா்.வி. கல்யாணசுந்தரம் தனது சொந்த பணத்திலிருந்து திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சௌந்திரராஜனிடம் வழங்கினாா். அப்போது, பள்ளிக்கான இடம் தோ்வு குறித்த சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலா் சி. பரமசிவம், பள்ளி தலைமை ஆசிரியா் க. சுவாமிநாதன், முன்னாள் ஊராட்சித் தலைவா் பால. முத்து, ஆசிரியா் சு. இரா. சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.