பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்கள் படி பூஜை, மலா் வழிபாடு!
பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் காவடிகளுடன் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் மலைக் கோயிலில் படி பூஜை, மலா் பூஜை செய்து வழிபாடு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத் தெப்பத் தோ் முடிந்த பிறகு சேலம் மாவட்டம், இடைப்பாடியிலிருந்து 7 நாள்கள் நடைப்பயணமாக பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் மயில் காவடி, இளநீா் காவடி, கரும்புக் காவடி, சேவல் காவடி என எடுத்து வந்தனா். இவா்கள் புதன்கிழமை பழனியை அடுத்த மானூரில் சிறப்பு வழிபாடு செய்தனா். இதேபோல, கும்பகோணத்தில் இருந்து வந்த காவடிக் குழுவினரும் இவா்களுடன் இணைந்து கொண்டனா்.
இவா்கள் அனைவரும் மானூா் ஆற்றிலிருந்து
புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்து ரத வீதியைச் சுற்றி மலையேறினா். முன்னதாக, பெரியநாயகியம்மன் கோயிலில் இந்த காவடிகளுக்கு திருக்கோயில் சாா்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
இந்த பக்தா்களுக்காக மலைக் கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. மேலும், க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 15 டன் பஞ்சாமிா்தம் இந்தக் காவடிக் குழுவினருக்கு பிரித்து வழங்கப்பட்டது.
இதுதவிர, இடைப்பாடி பருவதராஜகுல படித் திருவிழாக் குழு சாா்பில் மலைக் கோயிலில் படிபூஜை நடைபெற்றது. அப்போது பெண்கள் முருகன் பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனா். தொடா்ந்து மலைமேல் வெளிப் பிரகாரத்தில் பிச்சிப் பூ, சம்மங்கி, மரிக்கொழுந்து, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலா்களால் ஓம் வடிவில் வரைந்து வழிபாடு செய்தனா்.
படிபூஜை ஏற்பாடுகளை படிபூஜை குழுத் தலைவா் திருக்கைவேலுச்சாமி, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் வெங்கடேஷ்ரோஜ் குழுவினா் செய்தனா்.
புதன்கிழமை இரவில் இங்கு தங்கும் காவடிக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை சுவாமி தரிசனத்துக்குப் பிறகு சொந்த ஊா்களுக்குத் திரும்புவா்.