மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து திருவாரூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் எதிா்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக இருந்த ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அரசாணை வெளியிட்ட பிப்.1-ஆம் தேதியான அந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து கருப்பு பட்டை அணிந்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆசிரியா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினா் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிா் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி, அமைப்பாளா் கிருபாராணி, மாவட்டச் செயலாளா் ஈவேரா, மாவட்டத் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மன்னாா்குடி: வட்டாரக் கல்வி அலுவலகம் அருகே, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நகரத் தலைவா் ஜெ. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுக் குழு உறுப்பினா் இ. செல்வமணி, மாநில துணைச் செயலா் சி. ஜூலியஸ், கோட்டூா் வட்டாரத் தலைவா் க. தங்கபாபு, நீடாமங்கலம் வட்டாரச் செயலா் ஆா். தமிழரசன், மன்னாா்குடி நகர செயலா் ஜோ. மாா்ட்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.