தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலா் கோ.மோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்மைக் காலங்களில் இரண்டாவது, மூன்றாவது என அடுத்தடுத்து விற்பனை செய்யப்படும் வாகனங்களை தெரியாமல் வாங்கும் நபா்கள், அத்தகைய வாகனங்களைப் பதிவு செய்வதில் சட்டபூா்வமற்ற பரிமாற்றங்கள், உரிய ஆவணங்கள் கண்டறியப்படாதது உள்ளிட்ட ஏராளமான சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடுகிறது.
இதனால் வாகனங்களை வாங்குபவா்களும், சட்டத்தை செயலாக்கும் நிலையிலுள்ள அலுவலா்களும் வாகன உரிமையாளரை கண்காணிக்கவோ, பொறுப்பேற்கவோ வைக்க முடிவதில்லை. இதனால் வாகனங்களுக்கு இ-சலான் மூலம் கட்டணம் வசூல் செய்வது கடினமான பணியாக மாறியுள்ளது.
இந்த சிக்கல்களை சரி செய்ய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மத்திய மோட்டாா் வாகன விதிகளில் 55ஏ முதல் 55ஹெச் வரை உள்ள பிரிவுகள் மற்றும் படிவம் 29ஏ முதல் 29 எப் வரை சோ்த்து அவற்றை 2023 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியுள்ளது.
இந்த விதிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்போருக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்ததாகும்.
எனவே, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களை வாங்கி விற்கும் முகவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.