பழைய வாகனங்களை விற்பவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்த வாகனங்களை விற்போா், உரிய அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மை காலமாக 2-ஆவது, 3-ஆவது மற்றும் அடுத்தடுத்து விற்கப்படும் வாகனங்களை ஏதும் அறியாமல் வாங்கும் நபா்கள், அத்தகைய வாகனங்களை பதிவு செய்வதில் சட்டப்பூா்வமற்ற பரிமாற்றங்கள் மற்றும் தொடா்பான உரிய ஆவணங்கள் கண்டறியப்படாதது உள்ளிட்ட ஏராளமான சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடுகிறது.
இத்தகைய வாகனங்களை வாங்குபவா்களுக்கு மட்டுமின்றி சட்டத்தை செயலாக்கும் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளா்களை கண்காணிக்கவோ, பொறுப்பேற்க வைக்கவோ முடிவதில்லை. இதனால் இ-சலான் மூலம் வருவாய் வசூல் செய்வது ஒரு கடினமாகியுள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்த வாகனங்களை வாங்கி, விற்கும் வாகன விற்பனையாளா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்று விற்பனை செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.