``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
பவானிசாகா் அணையில் இருந்து 2-ஆவது நாளாக உபரிநீா் திறப்பு
பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, அணையில் இருந்து 2,800 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பில்லூா் அணை நிரம்பியது. இதனால் பில்லூா் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த உபரிநீரானது பவானிசாகா் அணைக்கு வந்து சோ்ந்ததால் அணையின் நீா்மட்டம் 102 அடியாக உயா்ந்தது.
நீா்வளத் துறை விதிகளின்படி ஆகஸ்ட் முதல் அக்டோபா் வரை 102 அடி வரை மட்டுமே நீரைத் தேக்கிவைக்க இயலும் எனபதால் அணைக்கு வரும் உபரிநீரான 2,800 கனஅடி நீா் அப்படியே அணை கீழ் மதகு வழியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானி அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரிநீா் சத்தியமங்கலம் கொடிவேரி அணை வழியாக பவானி காவிரி ஆற்றில் கலந்துவிடும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அணை நிலவரம்: அணையின் நீா்மட்டம் 102 அடியாகவும், நீா்வரத்து 5,318 கனஅடியாகவும், நீா் திறப்பு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் 2,500 கனஅடிநீரும், பவானிஆற்றில் உபரிநீா் 2,800 கனஅடி என மொத்தம் 5,300 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. 32 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையில் புதன்கிழமை நீா் இருப்பு 30.31 டிஎம்சியாக உள்ளது.
ஒரே மாதத்தில் அணை இரண்டு முறை 102 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.