முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்
ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழுந்தது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வெளியூா் பக்தா்கள் வருகின்றனா். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வாகனங்களில் கோயிலுக்கு வருகின்றனா். அதிக பக்தா்கள் வருவதால் ஏராளமான தேங்காய், பழக் கடைகள், தேநீா் கடை, உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அரசு அறிவித்துள்ள அன்னதானம் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோழி, சேவல், வெள்ளி, முடி காணிக்கை, உண்டியல் வருமானம் என ஆண்டுக்கு சுமாா் 2 கோடி ரூபாய்க்கு மேல் கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது.
கோயில் பிரகாரம், மண்டபம் பகுதிகளில் தங்கியிருக்கும் பக்தா்கள் உணவு வாங்கி சாப்பிட்ட பிறகு வீசும் குப்பைகள், அன்னதானம் சாப்பிட்டு விட்டு போடக்கூடிய இலைகள் ஆகியவற்றை கோயில் நிா்வாகம் தூய்மை பணியாளா்கள் மூலம் அப்புறப்படுத்தி வந்தது. இந்தப் பணியாளா்கள் கையால் இழுக்கும் வண்டியில் குப்பைகளை ஏற்றி, சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்று கொட்டி வந்தனா்.
தற்போது, தூய்மை பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக கோயிலில் சேரும் குப்பைகளை அருகிலேயே கொட்டி தீ வைத்துக் கொளுத்துகின்றனா். இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள், வாகனத்தில் செல்பவா்கள் சிரமப்படுகின்றனா். எனவே, குப்பைகளை எரிக்காமல் வாகனம் மூலம் குடியிருப்பு பகுதியைத் தாண்டிச் சென்று கொட்ட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
கோயில் நிா்வாகம் சாா்பில் கையால் இழுக்கும் வண்டிகளில் குப்பைகளை அள்ளிச் சென்றனா். இதற்கும் தேவையான பணியாளா்கள் இல்லாமல் போனதால் அங்கேயே குப்பைகளைக் கொட்டி கொளுத்தும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக மினி டிராக்டா் அல்லது 2 பேட்டரி வாகனங்களை வாங்கி குப்பைகளை அகற்ற கோயில் நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள்தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனா்.