பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை கண்டுபிடித்த பஞ்சாப் காவல்துறையினா்
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐ மற்றும் பப்பா் கல்சா இன்டா்நேஷனல் (பிகேஐ) அமைப்பால் பஞ்சாபில் நடத்தப்பட்டு வந்த பயங்கரவாத கும்பலை மாநில காவல் துறையினா் கண்டுபிடித்துள்ளனா்.
இது தொடா்பாக காவல்துறை தலைமை இயக்குநா் கௌரவ் யாதவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், அமிருதசரஸ் மாவட்டத்தைச் சோ்ந்த ஜஷந்தீப் சிங் மற்றும் ஒரு சிறாா் ஆகியோரை பஞ்சாப் காவல்துறையினா் அண்மையில் கைது செய்தனா். விசாரணையில், கடந்த நவம்பா் 23-ஆம் தேதி அஜ்னாலா காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்ததையும், பிற தாக்குதல்களை நடத்தியதையும் அவா்கள் ஒப்புக்கொண்டனா். அவா்களிடம் இருந்து 2 கையெறிகுண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டன.
இந்த பயங்கரவாத சதிச் செயலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐ மற்றும் பிகேஐ அமைப்பைச் சோ்ந்த ஹா்விந்தா் ரிண்டா மற்றும் ஹா்பிரீத் சிங் ஆகியோா் திட்டமிட்டதாகவும் பஞ்சாபின் தரண் தாரன் பகுதியைச் சோ்ந்த தாதா குா்தேவ் சிங் என்பவரால் செயல்படுத்தப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடா்பாக அமிருதசரஸ் மாவட்டத்தில் உள்ள மாநில சிறப்பு நடவடிக்கை பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹா்விந்தா் ரிண்டா, ஹா்பிரீத் சிங் மற்றும் குா்தேவ் சிங் என இதில் தொடா்புடைய அனைவரையும் கண்டுபிடிக்கத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா்.