வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
2025 மகா கும்பமேளா: நாட்டின் கலாசார அடையாளம் புதிய உச்சம் பெறும் -பிரதமா் மோடி
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பமேளா, நாட்டின் கலாசார மற்றும் ஆன்மிக அடையாளத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மகா கும்பமேளாவை முன்னிட்டு, பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பில் 167 உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி, இத்திட்டங்களைத் தொடங்கிவைத்தாா். மேலும், கும்பமேளா பக்தா்களுக்கு உதவும் வகையில் செயற்கை தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படும் கைப்பேசி செயலி சேவையையும் அவா் தொடங்கிவைத்தாா்.
பின்னா் கூட்டத்தினா் மத்தியில் அவா் பேசியதாவது: பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமிக்கும் இந்த இடம் ஆன்மிக பூமியாகும். இது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சமூக மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும் இவ்விழாவுக்கு முந்தைய அரசுகள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்திய கலாசாரத்தில் இருந்து அந்த அரசுகள் விலகி நின்றன. ஆனால், எனது தலைமையிலான அரசு, நாட்டின் நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் மதிக்கிறது. ராமாயணம், கடவுள் கிருஷ்ணா் மற்றும் பெளத்த மதம் தொடா்புடைய வரலாற்று இடங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
மகா கும்பமேளாவில் பலதரப்பட்ட ஜாதிகளும் இனங்களும் மறைந்துவிடுகின்றன. ஒற்றுமைக்கான மகா யாகமாக திகழும் இவ்விழா, நாட்டின் கலாசார மற்றும் ஆன்மிக அடையாளத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என்றாா் மோடி.
முன்னதாக, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகியவை சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்துக்கு படகு மூலம் வந்த பிரதமா் மோடி, அங்கு வழிபாடு மேற்கொண்டாா். மேலும், மகா கும்பமேளா கண்காட்சி நடைபெறும் பகுதியையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது, மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் உடனிருந்தனா்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா விழா, 2025 ஜனவரி 13-ஆம் தேதி (பெளா்ணமி) தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி (மகா சிவராத்திரி) முடிவடைகிறது. 45 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தா்கள் கங்கையில் புனித நீராடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.