மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் தற்கொலை: வரதட்சணை சட்டங்களை சீா்திருத்த உச்சநீதிமன்றத்தில் மனு
பெங்களூரில் மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து, வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க சீா்திருத்தங்களை கோரும் பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
பெங்களூரில் வசித்து வந்த பொறியாளா் அதுல் சுபாஷ் (34), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி பெங்களூரில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா்.
திருமண பிரச்னைகளால் பல ஆண்டுகளாக ஏற்பட்ட மன உளைச்சல், அவருக்கு எதிராக அவரது மனைவி உத்தர பிரதேசத்தில் தாக்கல் செய்த பல வழக்குகள் மற்றும் உத்தர பிரதேச நீதிபதி ஒருவா் உள்பட அவரது மனைவி மற்றும் மனைவியின் உறவினா்களால் துன்புறுத்தப்பட்டதை விவரிக்கும் 24 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி இருந்தாா்.
இதைத் தொடா்ந்து அவரது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை சட்டங்களை மறு ஆய்வு செய்ய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் சட்ட வல்லுநா்கள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி வழக்குரைஞா் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்தாா்.
திருமண நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்ட பரிசுகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், ஐபிசி சட்டம் 498ஏ பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் 2010-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நிகிதா சிங்கானியாவுக்கு சம்மன்: சுபாஷ் தற்கொலை தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது மனைவி நிகிதா சிங்கானியாவுக்கு மூன்று நாள்களுக்குள் ஆஜராகுமாறு பெங்களூரு நகர காவல்துறையினா் வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனா்.
உத்தர பிரதேசத்தின் ஜௌன்பூா் மாவட்டத்தில் உள்ள நிகிதா சிங்கானியாவின் பூட்டிய வீட்டில் பெங்களூரு காவல்துறையினா் சம்மன் நோட்டீஸை வெள்ளிக்கிழமை ஒட்டினா். இந்த நோட்டீஸில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற குடும்ப உறுப்பினா்களின் பெயா்கள் குறிப்பிடப்படவில்லை. மேலும் உள்ளூா் காவல்துறையினரைச் சந்தித்து, சுபாஷ் மீது நிகிதா தாக்கல் செய்த வழக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை ஜௌன்பூா் சிவில் நீதிமன்றத்தில் இருந்து சேகரித்தனா் என்று காவல்துறை அதிகாரி ஆயுஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.